உ.பி.யில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அரசு பள்ளி ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தால் சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஊழியர் அமித் மற்றும் அவரது நண்பர் பங்கஜ் ஆகிய இருவரும் அந்த சிறுமியை கடத்தி, அங்குள்ள ஒரு ஆளில்லாத வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, அமித் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பங்கஜ் வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன சிறுமி, இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், அவரது தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியர் மற்றும் அவருக்கு உதவி செய்த மற்றொரு நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.