கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்த மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம், அக்டோபரில் தொடங்கும் 2024-25-ம் ஆண்டு பருவத்தில் சர்க்கரை ஆலைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 வீதம் விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்யும். மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.25 உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2024-25 சர்க்கரைப் பருவத்திக்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.340 என்ற அடிப்படை விகிதத்திற்கு உயர்த்த மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித்தார்.
இதேபோல் விண்வெளித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, இந்த துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி செயற்கைக்கோள்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடு, செயற்கைக்கோள் தரவு தயாரிப்புகள் மற்றும் தரை மற்றும் பயனர் பிரிவுகளில் தானியங்கி வழியின் கீழ் 74 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அரசாங்கம் அனுமதித்துள்ளது. அதற்கு மேற்பட்ட அளவுக்கு மட்டுமே அரசின் அனுமதி தேவைப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பதிலளித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், "முன்பெல்லாம் நாங்கள் விவாதத்திற்கு தயாராக இருந்தோம், இன்னும் நாங்கள் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் நாங்கள் தயாராக இருப்போம், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவர்கள் எங்கள் 'அன்னதாதாக்கள்" என்று அவர் கூறினார்.