2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற புதுமைகளை புகுத்துவது முக்கியம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற புதுமைகளை புகுத்துவது முக்கியம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2022-09-29 22:25 GMT

பெங்களூரு: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற புதுமைகளை புகுத்துவது முக்கியம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுமைகள் அறிமுகம்

கர்நாடக தொழில் வர்த்தக சபையின் 105-வது பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-

நாம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள புதுமையை புகுத்துதல் முக்கியமானது. இந்த புதுமை பணிகளை இப்போது தொடங்கி வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாம் செய்ய முடியும். அவ்வாறு செய்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற முடியும். இந்த புதுமைகளை அறிமுகம் செய்வதால், பொருளாதாரத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொருளாதார வளர்ச்சி

அப்போது தான் நாம் நமது பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியும். மருத்துவ சேவைகள், கல்வி, மென்பொருள் சார்ந்த சேவைகள் போன்ற துறைகளில் டிஜிட்டல் மயத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இதை முன்னெடுத்து செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

கொரோனா நோய் பரவலால் இந்தியா கடும் நெருக்கடிகளை சந்தித்தது. அனைத்து துறைகளிலும் நாம் சாதித்து விட்டோம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நெருக்கடியில் இருந்து வெளியே வந்துள்ளோம்.

பல்வேறு அனுபவங்கள்

பணவீக்கமாக இருந்தாலும் சரி, தேவைப்படுவோருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும் சரி, பரம ஏழைகளுக்கு உதவிகள் செய்வதாக இருந்தாலும் சரி அந்த விஷயங்களில் வளர்ந்து நாடுகளே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவுக்கு கிடைத்த அனுபவத்தை போல் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அதிக மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும் இந்தியாவில் சாலை உள்ளிட்ட பிற வசதிகள் நன்றாக உள்ளன. நமது நாட்டில் தொழில்நுட்ப புரட்சி கொரோனா நெருக்கடி காலத்திற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. அதனால் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கும், மக்களை சென்றடைவதற்கும், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. நமது நாடு அதிக சந்தை வாய்ப்புகளை கொண்டுள்ள நாடு. அத்துடன் வளர்ந்து வரும் நாடு என்று சொல்கிறார்கள். ஆனால் தடுப்பூசிகளை செலுத்துவது, நிவாரண உதவிகளை வழங்குவது, சிறு-குறு தொழில்களுக்கு உதவிகளை வழங்குவதில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் கவனிக்கத்தக்க வகையில் பணிகளை செய்தோம். இது இந்திய மக்களின் தன்னம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்