'ரேபிஸ்' நோயால் சிறுவன் உயிரிழப்பு

மூடிகெரேயில் ‘ேரபிஸ்’ நோய் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்தான். வெறிநாய் கடிக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் அவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Update: 2022-12-16 18:45 GMT

சிக்கமகளூரு:

வெறிநாய் கடித்தது

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா காரலகத்தே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளி. இவரது மகன் பிரதான்(வயது 12). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வந்த சிறுவன் பிரதானை தெருநாய்கள் பாய்ந்து கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த அவன், மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றான்.

பின்னர் சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுவன் பிரதான், காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

சிறுவன் சாவு

இதனால் அவனை, ரமேஷ் மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். மேலும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட அவன், மேல் சிகிச்சைக்காக ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவனது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்போது பிரதானுக்கு ரேபிஸ் நோய் இருப்பது தெரியவந்தது.

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட பிரதானுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவன் ரேபஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரதானை டாக்டர்கள் மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பிரதான் பரிதாபமாக உயிரிழந்தான்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்த நிலையில், நாய்க்கடிக்கு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் பிரதான் இறந்துவிட்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மூடிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்