மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க அனுமதி மறுத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பத்லாப்பூரில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் 3 மற்றும் 4 வயதுடைய 2 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
பள்ளிக்கூடத்தில் காவலாளியாக பணியாற்றிய அக்ஷய் ஷிண்டே என்ற நபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி மாணவ , மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேவேளை, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட அக்சய் ஷிண்டே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை சரிவர விசாரிக்காத 3 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இச்சம்பவத்தை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும், பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மாநில முழுவதும் நாளை (ஆக. 23) முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சியான இந்தியான கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. மேலும், ரெயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்தை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக இன்று விசாரித்த ஐகோர்ட்டு, மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க அரசியல் கட்சிகள், தனிநபர்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.