பந்து என நினைத்து வெடிகுண்டை வீசி விளையாடிய சிறுவர்கள்.. அடுத்து நடந்த பயங்கரம்
குண்டுவெடிப்புக்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரசே காரணம் என உள்ளூர் பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.;
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம், பாண்டுவா நகரத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே இன்று சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சிறுவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். அப்போது, 3 சிறுவர்கள் காயமடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஒரு சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஷின்சுரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பந்து என நினைத்து கையில் எடுத்து விளையாடியபோது வெடித்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரசே காரணம் என உள்ளூர் பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். பாண்டுவா நகரத்தில் திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் பிரசாரத்திற்கு முன்னதாக ஆளுங்கட்சியின் அச்சுறுத்தும் அரசியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் என கருதப்படும் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் பிரசார பொதுக்கூட்டம் இன்று பாண்டுவாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.