மத்தியபிரதேச புதிய முதல்-மந்திரி யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்தியபிரதேசத்தில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி தக்கவைத்துள்ளது.
போபால்,
மத்தியபிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், 163 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அபார வெற்றிபெற்றது. மத்தியபிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்ற நிலையில் தற்போது ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதனிடையே, மத்தியபிரதேச முதல்-மந்திரி யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதால் புதிய நபருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என பாஜக வட்டாரத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில், முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்தியபிரதேச புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவை தேர்வு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்தியபிரதேச புதிய முதல்-மந்திரியாக மோகன் யாதவ் (வயது 58) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்-மந்திரி பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மூத்த தலைவரான மோகன் யாதவ் உஜ்ஜைனி தக்ஷின் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.