வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் பசவராஜ் பொம்மை- மேலிட பொறுப்பாளர் அருண்சிங் அறிவிப்பு

வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தான் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங் அறிவித்துள்ளார்.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தான் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங்  அறிவித்துள்ளார்.

முதல்-மந்திரி வேட்பாளர்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பிரசாரத்தை தொடங்கி விட்டன. ஒருபுறம் ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை, சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்ட பிரசாரமாக கருதப்படுகிறது. இன்னொருபுறம் பா.ஜனதா தலைவர்கள் 'ஜனசங்கல்ப' என்ற பெயரில் பயணத்தை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்களும் மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். ஆக மொத்தம் மூன்று முக்கியமான கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பசவராஜ் பொம்மை தான் தங்கள் கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் என்று அறிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:-

சந்தேகம் வேண்டாம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. கர்நாடகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும். ஏனென்றால் பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.

சட்டசபை தேர்தலை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலும், எடியூரப்பாவின் வழிகாட்டுதலின்பேரிலும் எதிர்கொள்வோம். பசவராஜ் பொம்மை தற்போது முதல்-மந்திரியாக உள்ளார். தேர்தல் நடைபெறும்போதும் அவர் தான் முதல்-மந்திரி. வருகிற சட்டசபை தேர்தலில் அவர் தான் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

எடியூரப்பா சுற்றுப்பயணம்

பசவராஜ் பொம்மை, மிக எளிமையான, நேர்மையான, பணிவான மனிதர். கட்சியின் பொதுக்கூட்டங்களில் பசவராஜ் பொம்மையின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அவர் சாமானிய மக்களின் முதல்-மந்திரியாக செயல்படுகிறார். கர்நாடக மக்கள், பசவராஜ் பொம்மை தங்களில் ஒருவனைப்போல் இருப்பதாக உணர்கிறார்கள். கர்நாடகத்தில் எடியூரப்பா மிகப்பெரிய தலைவர். பா.ஜனதாவுக்கு அவரது வழிகாட்டுதல் உள்ளது.

எடியூரப்பா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். 150 தொகுதிகளில் வெற்றி பெற ஆதரவு வழங்குமாறு கேட்கிறார். இது ஒரு பெரிய விஷயம். மைசூரு மண்டலத்தில் குறிப்பாக மண்டியா, ராமநகர், ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். கடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் அங்கு எங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தன.

பா.ஜனதா ஆட்சி

இந்த முறை மைசூரு மண்டலத்தில் எங்கள் கட்சிக்கு அதிசயம் நிகழும். மைசூரு மண்டலம் மற்றும் கல்யாண கர்நாடக பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் பா.ஜனதாவில் சேருவார்கள். ஏனென்றால் அடுத்து பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களின் எதிர்காலம் பா.ஜனதாவில் தான் உள்ளது.

கர்நாடகத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பு இவ்வாறு தான் அக்கட்சி இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அங்கு அக்கட்சி படுதோல்வி அடைந்தது. கோவாவில் காங்கிரசுக்கு இருந்த 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் அக்கட்சியை விட்டு விலகிவிட்டனர். காங்கிரசை விட்டு வெளியேறு இயக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை தோல்வி அடைந்துவிட்டது.

இவ்வாறு அருண்சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்