2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி 'ஹாட்ரிக்' வெற்றி பெறுவார்- மத்திய மந்திரி எல்.முருகன்

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பழங்குடியின மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-11-18 22:45 GMT

புதுச்சேரி, 

மத்திய மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்புவது குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான். அதற்கான உரிய பதிலை கொடுத்தால் கவர்னர் பரிசீலிக்க போகிறார்.

தமிழகத்தில் விவசாயிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். விவசாயிகளை ஒடுக்கும் விதமாக குண்டர் சட்டம் பதிவு செய்துவிட்டு, அதை திரும்ப பெறுவது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையே காட்டுகிறது.

தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சபாநாயகராக, அமைச்சர்களாக உள்ளனர். புதுவை அருகில் உள்ள தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும். புதுச்சேரிக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் நிதி உதவி வழங்கி வருகிறது. மீன்வளத்துறைக்கு மட்டும் ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி தரப்பட்டுள்ளது.

மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் 'ஹாட்ரிக்' வெற்றி பெறுவார். தற்போது நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்