விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர் வீரசாவர்க்கர்- பிரியங்க் கார்கே

கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு வீரசாவர்க்கர் 6 முறை கடிதம் எழுதினார் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.;

Update:2022-08-25 04:29 IST

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

6 முறை கடிதம்

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு மக்களின் எதிர்ப்பால் 2, 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவினர் வீரசாவர்க்கர் ரத யாத்திரை நடத்துகிறார்கள். கோவிலில் அவரது உருவப்படத்தை வைத்து வழிபடுகிறார்கள். ஆனால் அடிப்படையில் வீரசாவர்க்கர் ஒரு நாத்திகர். புரட்சிகரமான சிந்தனையாளராக இருந்து பிற்காலத்தில் இந்துத்வா கொள்கைக்கு மாறியவர். அவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சுமார் 700 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் வீரசாவர்க்கர் மட்டுமே கருணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு கோரி 6 முறை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதினார். அது மட்டுமின்றி அவரது மனைவியும் கருணை கடிதம் எழுதினார். அந்த சிறையில் இருந்த மற்ற யாரும் கருணை வழங்குமாறு கேட்கவில்லை.

உண்மையான வரலாறு

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். சுதந்திரத்திற்கு முன்பு தேசத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவரே வீரசாவர்க்கர் தான். அதன் பிறகே மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்கள் பிரிவினையை ஆதரித்தனர். அதற்கு அடித்தளம் அமைத்தவர் வீரசாவர்க்கர். ஆனால் காந்தியும், நேருவும் தான் நாட்டின் பிரிவினைக்கு காரணம் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் சுதந்திர போராட்டத்தை நடத்தியது. ஆனால் வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். ஆங்கிலேய ராணுவத்திற்கு ஆள் சேர்த்துவிட்டார். இத்தகைய வீரசாவர்க்கரை பா.ஜனதாவில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரின் உண்மையான வரலாற்றை பா.ஜனதாவினர் அறிந்து கொள்ள வேண்டும். மாடுகளை கடவுளுக்கு சமமாக பா.ஜனதாவினர் வணங்குகிறார்கள். ஆனால் அதை வீரசாவர்க்கர் எதிர்த்தார். மேலும் ஆங்கிலேயர்களிடம் இருந்து வீரசாவர்க்கர் ஓய்வூதியம் பெற்றார். ஓய்வூதியம் போதாது என்று அதை உயர்த்துமாறு கோரி கடிதம் எழுதினார். இவற்றுக்கு எல்லாம் பா.ஜனதாவினர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்