பா.ஜ.க. தொண்டர் மயங்கி விழுந்து சாவு
சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பா.ஜனதா தொண்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சிவமொக்கா:-
சிவமொக்கா சோகானே பகுதியில் ரூ.450 கோடியில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு கர்நாடகத்தின் தேசிய கவி குவெம்பு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிவமொக்கா விமான நிலையத்திற்கு வந்தனர். இதில் சொரப் தாலுகா சிம்மனூரு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தொண்டர் மல்லிகார்ஜுனப்பா (வயது58) என்பவரும் கலந்து கொண்டார். அப்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்்த பந்தலில் அமர்ந்து இருந்தார். அப்போது மல்லிகார்ஜுனப்பா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மல்லிகார்ஜுனப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.