அரசியலில் என்னை ஒழிக்க பா.ஜனதா சதி; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய முயற்சி நடந்ததுடன், அரசியலில் என்னை ஒழிக்க பா.ஜனதா சதி செய்வதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2023-04-21 22:21 GMT

பெங்களூரு:

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வேட்பு மனுவை தள்ளுபடி...

நான் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பின்பு பா.ஜனதாவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகிறேன். மேகதாது பாதயாத்திரை, ராகுல்காந்தியின் பாதயாத்திரையால் மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்தது. கனகபுரா தொகுதியில் வேட்பு மனுவுடன் நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை 5 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். பா.ஜனதாவின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் இருந்தும் பிரமாண பத்திரம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தது.

கடந்த முறை கூட என்னுடைய வேட்பு மனுவை தள்ளுபடி செய்யும் முயற்சிகள் நடந்தது. தற்போதும் எனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யும் முயற்சி நடந்தது. அதனால் தான் டி.கே.சுரேஷ் கனகபுராவில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு வீட்டை தவிர வேறு எந்த சொத்தும் நான் வாங்கவில்லை. அப்படி இருந்தும் எனது சொத்துகள் உயர்ந்திருப்பதாக பேசி வருகின்றனர்.

அரசியலில் இருந்து ஒழிக்க சதி

எனது சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது என்பது குறித்து பெரிய அளவில் விவாதமே நடக்கிறது. பழைய சொத்துகளின் மதிப்பு உயரத்தான் செய்யும். தேர்தல் நேரத்தில் என்னை ஒழித்து கட்ட சதி நடக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது வலுக்கட்டாயப்படுத்தி சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அட்வகேட் ஜெனரல் கூட ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட்டால் போதும் என்று கூறி இருந்தார். ஆனாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பா.ஜனதாவினர் அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.ராகுல்காந்தி மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான தலைவர்களை கூட பழிவாங்குகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை சிக்க வைத்தனர். என்னை அரசியலில் இருந்து ஒழிக்க பா.ஜனதா சதி செய்கிறது. பா.ஜனதாவினர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். மக்கள் என்னை பாறை என்று அழைக்கிறார்கள். பாறை போன்று திடமானவன். பா.ஜனதாவின் அனுதாபம் எனக்கு தேவையில்லை. மக்களின் அன்பு மட்டும் போதும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்