2008-ம் ஆண்டு ஹெப்பால் தொகுதி புதிதாக உதயமானது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 554 ஆண்களும், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 125 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 52 பேரும் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட இங்கு 3 சட்டசபை தேர்தல், ஒரு இடைத்தேர்தலை சேர்த்து என மொத்தம் 4 தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. இதில் 3 முறையும் பா.ஜனதா கட்சியும், ஒரு முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.
இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சுரேஷ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் இவரே போட்டியிட உள்ளார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மோகித் அல்தாப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த நாராயணசாமியும், முன்னாள் எம்.எல்.ஏ. கட்டா சுப்பிரமணிய நாயுடுவும் டிக்ெகட் கேட்டு வந்தனா். ஆனால் அவர்கள் 2 பேருக்கும் டிக்கெட் வழங்க பா.ஜனதா மேலிடம் மறுத்துவிட்டது. அவா்களுக்கு பதில் கட்டா சுப்பிரமணிய நாயுடுவின் மகனான முன்னாள் கவுன்சிலர் கட்டா ஜெகதீசுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது.
இங்கு வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக ஒக்கலிகர்
மற்றும் முஸ்லிம் சமுதாய மக்கள் உள்ளனர். இந்த தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ராதகிருஷ்ணா கோவில், ஹெப்பால், விஷ்வநாத் நாகேனஹள்ளி, மனோரயண பாளையா, கங்கேனஹள்ளி, கே.சி.நகர், கங்கா நகர், சஞ்சய்நகர் ஆகிய 8 வார்டுகள் உள்ளது.
இங்கு கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுரேஷ், பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் 2 சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதி பா.ஜனதா வசம் உள்ளதால் ஏராளமான வளர்ச்சி பணிகள் அங்கு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. எனவே, ஹெப்பால் தொகுதியில் மீண்டும் வெற்றிக் கொடியை நாட்ட பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஹெப்பால் தொகுதியை இந்த முறை பா.ஜனதா கட்சி தன்வசப்படுத்துமா? என்பதை வருகிற மே 13-ந் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
ஹெப்பால் தொகுதியில் கடந்த 2008 மற்றும் 2018-ம் ஆண்டில் நடந்த 3 சட்டசபை தேர்தல் மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
2008 கட்டா சுப்ரமணியநாயுடு(பா.ஜ.க.) -46,715 எச்.எம்.ரேவண்ணா(காங்.) -41,763
2013 ஜெகதீஷ் குமார்(பா.ஜ.க.) -38,162 அப்துல் ரகுமான் ஷெரீப்(காங்.) -33,026
2016 நாராயணசாமி(பா.ஜ.க.) -60,367 அப்துல் ரகுமான் ஷெரீப்(காங்.) -41,218
2018 பி.எஸ்.சுரேஷ்(காங்.) -74,453 நாராயணசாமி(காங்.) -53,313