டெல்லியில் ஜே.பி.நட்டா தலைமையில் உயர்நிலை குழு கூட்டம்; பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு குறித்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) 140 தொகுதிகளுக்கான முதற்கட்ட பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

Update: 2023-04-08 18:45 GMT

பெங்களூரு:

நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடக்கிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாக இருக்கிறது.

ஆளும் கட்சியான பா.ஜனதா சார்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. வேட்பாளர்கள் தேர்வு குறித்து கர்நாடக மாநில பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூரு புறநகரில் உள்ள ஓட்டலில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட, தாலுகா மற்றும் பூத் கமிட்டி மட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் அந்தந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று கருத்து கேட்கப்பட்டது.

உயர்நிலை குழு கூட்டம்

அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தயாராக உள்ள 3 பிரமுகர்களின் பட்டியலை தயார் செய்து, 224 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும்படி கர்நாடக பா.ஜனதாவுக்கு, மத்திய பா.ஜனதா தேர்தல் குழு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கும் 3 பேர் அடங்கிய பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த 3 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் 2 நாட்கள் பா.ஜனதாவின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, டெல்லியில் உள்ள பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் நேற்று உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளரும், தமிழக பா.ஜனதா தலைவருமான அண்ணாமலை உள்பட 15 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள்.

மாற்றுக்கட்சியில் இருந்து...

குறிப்பாக உயர்நிலை குழு கூட்டத்தில் 5 முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட தந்தை, மகன்கள் வாய்ப்பு கேட்பது, தந்தைக்கு பதிலாக மகனுக்கு சீட் வேண்டும் என்று கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மந்திரி சோமண்ணா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டோர் தங்களது மகனுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார்கள். அப்படி இல்லையென்றால் தங்களுக்கு பதில் மகனுக்கு வாய்ப்பு கேட்கிறார்கள்.

குடும்ப அரசியலுக்கு எதிராக பா.ஜனதா பேசி வருவதால், தந்தைக்கு பதில் மகனுக்கு சீட் கொடுப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து தலைவர்கள் ஆலோசித்துள்ளனர். மேலும் 75 வயதான மூத்த நிர்வாகிகள் சிலரும் சீட் கேட்கிறார்கள். அதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு காரணமான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பது குறித்தும் உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்

மேலும் தற்போது 4 தடவை அல்லது அதற்கு மேல் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதா?, அவர்கள் மீது தொகுதி மக்களுக்கு ஏதேனும் அதிருப்தி உள்ளதா? என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு இருக்கும் சாதகம் மற்றும் பாதகம், தனியார் அமைப்புகள் மூலமாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் பற்றியும் ஆலோசித்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.

கர்நாடக பா.ஜனதா அனுப்பிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் பற்றியும் தலைவர்கள் ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் 140 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் இன்று மாலையில் பா.ஜனதா மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வருகை தந்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில்...

இன்று மாலையில் அவர் மைசூருவில் இருந்து டெல்லி திரும்புகிறார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பி.எல்.சந்தோஷ், எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு, நாளை (திங்கட்கிழமை) முதற்கட்டமாக 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, வருகிற 13-ந் தேதி 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

10 பேருக்கு கல்தா

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 8 முதல் 10 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் கல்தா கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் கர்நாடக பா.ஜனதா அனுப்பிய 3 பேரில் ஒருவரை மேலிட தலைவர்கள் இறுதி செய்து அறிவிக்க உள்ளனர். வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்