பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

பெண்கள் உரிமைகள் கள செயல்பாட்டாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 20:49 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

அதற்கு எதிராக, பெண்கள் உரிமைகள் கள செயல்பாட்டாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் கபில் சிபல் முறையிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனரா என தலைமை நீதிபதி வினவினார்.

அதற்கு கபில் சிபல், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேள்விக்கு உட்படுத்தவில்லை, அவர்கள் விடுவிக்கப்பட்ட முறையை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்