ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணிநேரம் மாற்றம் - பீகார் அரசு அறிவிப்பு

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணிநேரத்தை மாற்ற பீகார் அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2023-03-17 20:02 GMT

கோப்புப்படம்

பாட்னா,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் வாக்காளர்களைக் கவரும் வகையில் புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பணி நேரத்தை மாற்ற பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநில அரசின் பொது நிர்வாகத் துறை நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில், முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வந்து வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக அமலுக்கு வரும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தலைவர் அரவிந்த் குமார், சைதி நவராத்ரி மற்றும் ராமநவமி பண்டிகையின் போது இந்து ஊழியர்களுக்கும் இதேபோன்ற சுற்றறிக்கையை பீகார் அரசு வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையில், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன. நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை வலுப்படுத்த இது பெரிதும் உதவும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் எஜாஸ் அகமது கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சுனில் குமார் சிங் கூறுகையில், இந்த நடவடிக்கையால், முஸ்லிம் ஊழியர்களுக்கு மாலையில் நோன்பு துறக்க போதுமான நேரம் கிடைக்கும் என்றும், அவர்கள் திட்டமிட்ட வேலை நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்திற்கு வருவதால், வேலை பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்