ராகுல் காந்தியின் பாதயாத்திரை ராஜஸ்தானில் நுழைந்தது; காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
ராஜஸ்தான் எல்லையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜலவார்,
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தில் நடந்து வந்தது. அங்கு இந்த யாத்திரை நிறைவடைந்த நிலையில் நேற்று ராஜஸ்தானில் நுழைந்தது.
ராஜஸ்தான் எல்லையில் ராகுல் காந்தியை மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் நாட்டுப்புறக்கலைஞர்களும் அங்கு நடனங்கள் ஆடி பாதயாத்திரையாக வந்தவர்களை வரவேற்றனர். அப்போது கெலாட், சச்சின் பைலட் மற்றும் கோவிந்த் சிங்குடன் ராகுல் காந்தி கைகோர்த்து நடனம் ஆடினார்.
இந்த நிகழ்ச்சியில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக பங்கேற்றது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.