பெங்களூரு மழை வெள்ளத்துக்கு பா.ஜனதா அரசின் ஊழலே காரணம்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூரு மழை வெள்ளத்துக்கு பா.ஜனதா அரசின் ஊழலே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.;
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறிதாவது:-
பெங்களூருவில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை. அதனால் அதிகளவில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த பாதிப்புகளுக்கு பா.ஜனதா அரசின் ஊழலும் ஒரு காரணம். இத்தகைய பிரச்சினைகள் வந்தபோது காங்கிரஸ் அவற்றுக்கு எப்படி தீர்வு கண்டது என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். இந்த அரசு எவ்வாறு செயல்பட்டது என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும். மேலும் இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்க உள்ளோம். ஹிஜாப், ஹலால் போன்ற விவகாரங்களை விட வளர்ச்சி திட்டங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.
இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.