பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனர் தயானந்த் கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி தயானந்தை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-30 18:45 GMT

பெங்களூரு:-

போலீஸ் டி.ஜி.பி.

கர்நாடகத்தில் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதையடுத்து சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த பிரவீன் சூட், சி.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றார். முன்னதாக அவருக்கு பதிலாக தீயணைப்பு துறை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த அலோக் மோகன், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக கூடுதல் பொறுப்பை பெற்றார்.

இதையடுத்து போலீஸ் துறையில் சில அதிரடி உத்தரவுகளை முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது பெங்களூரு மாநகர கமிஷனர் பிரதாப் ரெட்டி உள்பட முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, உள்துறை பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி.யாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஏ. சலீம்

அவருக்கு பதிலாக, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக நுண்ணறிவு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக உள்ள தயானந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் போக்குவரத்து கூடுதல் சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம், சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சரத் சந்திரா, நுண்ணறிவு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணி இடமாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு உத்தரவு, உடனடியாக அமலுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்