மேற்கு வங்காளத்தில் பெண் மீது கொடூர தாக்குதல்.. பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

கைது செய்யப்பட்ட நபர் சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

Update: 2024-07-01 08:34 GMT

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒருவர் சரமாரியாக பிரம்பால் அடித்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

அடி வாங்கிய ஆணும், பெண்ணும் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கிராமத்தில் நடந்த கட்டப் பஞ்சாயத்தில் அவர்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை ஒருவர் மூங்கில் பிரம்பால் அடித்ததாக தெரிய வந்தது.

கடந்த 28-ம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதல் தொடர்பான வீடியோ வைரல் ஆன நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கிய தஜிமுல் என்ற ஜே.சி.பி.யை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் என்றும், அவர் சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹமிதுல் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

இதேபோல் கடந்த 25-ம்தேதி கூச்பெஹர் மாவட்டம் மாதபங்காவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் நிர்வாகியின் ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த இரு சம்பவங்களையும் கண்டித்து பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சோப்ரா தாக்குதல் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் தொடர்புடைய யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்