தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும்; பா.ஜனதா வலியுறுத்தல்

கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.;

Update:2023-08-17 00:15 IST

பெங்களூரு:

கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பா.ஜனதா எதிர்ப்பு

காவிரி நீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு சுமார் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு குறுவை சாகுபடி பரப்பை 4 மடங்கு அதிகரித்துள்ளது. அவற்றுக்கு 2 மடங்கு நீரை பயன்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தவுடன் காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டது தவறு. நமது மாநில விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் அணையில் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஒருமித்த செயல்பாடு

அந்த நீரை தற்போது தமிழகத்திற்கு கொடுக்கிறார்கள். முதல்-மந்திரி சித்தராமையா, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட மாட்டோம் என்று கூறினார். ஆனால் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையிலான நீர்ப்பாசனத்துறை மறுநாளே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துள்ளது. காவிரி நீர் நிர்வாகத்தில் ஒருமித்த செயல்பாடு இல்லை. நமது மாநில நீரை பாதுகாக்கும் உறுதியும் இந்த அரசிடம் இல்லை. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூற வேண்டும். இந்த விஷயத்தில் கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்