ஆங்கிலம் தெரியாததால் விவசாயியை ஏளனம் செய்த வங்கி அதிகாரிகள்

சிக்கமகளூருவில், ஆங்கிலம் தெரியாது என்று கூறியதால் விவசாயி ஒருவரை வங்கி அதிகாரிகள் ஏளனம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-21 21:54 GMT

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில், ஆங்கிலம் தெரியாது என்று கூறியதால் விவசாயி ஒருவரை வங்கி அதிகாரிகள் ஏளனம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயி

கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூரு உள்பட ஏராளமான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் அரசு, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து நிவாரண தொகையை பெற விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.

அதேபோல் சிக்கமகளூரு (மாவட்டம்) டவுனில் உள்ள ஒரு வங்கியில் நிவாரண தொகை பெற வேண்டி விண்ணப்பிக்க நேற்று முன்தினம் ஒரு விவசாயி சென்றார்.

ஆங்கிலம் தெரியாது

அப்போது அவரிடம் அங்கிருந்த அதிகாரிகள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்த ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து நிரப்பி தருமாறு கேட்டனர். அப்போது அந்த விவசாயி 'சுவாமி எனக்கு ஆங்கிலம் தெரிந்தால் நான் ஏன் விவசாயம் செய்யப்போகிறேன். நானும் உங்களைப் போல் ஏ.சி. ரூமில் அமர்ந்து வேலை பார்த்திருப்பேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது.

அதனால் எனக்கு கன்னட மொழியில் உள்ள படிவத்தை கொடுங்கள்' என்று கேட்டுள்ளார். அப்போது அவரை அங்கிருந்த அதிகாரிகள் ஏளனம் செய்ததாக கூறப்படுகிறது.

வீடியோ வைரல்

இந்த காட்சிகளை வங்கியில் இருந்த ஒரு வாடிக்கையாளர் தனது செல்போனில் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்