புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும், பெங்களூரு
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பெங்களூரு தயாராகி வருகிறது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு பகுதிகளில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெங்களூரு தயாராகி வருகிறது. இதற்காக எம்.ஜி.ரோடு, கமர்சியல் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மின் விளக்கு அலங்காரங்களுடன் ஜொலிக்கிறது. இந்த நிலையில், புத்தாண்டு, தொடர் விடுமுறை காரணமாக பெங்களூருவில் உள்ள ஓட்டல்களில் 55 ஆயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பெங்களூருவில் 3500-க்கும் மேற்பட்ட ஓட்டல்களும், 60-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன.
இந்த ஓட்டல்களில் 55 ஆயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வார இறுதி நாட்கள் காரணமாக தொடர் விடுமுறையால், வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் வசிப்போர் இந்த அறைகளை முன்பதிவு செய்திருப்பதாக ஓட்டல்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறைகள் முன்பதிவு பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடந்திருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டை பெங்களூருவில் தங்கி இருந்து கொண்டாடும் நோக்கத்தில் ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.