கேரளாவில் காகங்களுக்கும் பரவிய பறவை காய்ச்சல்: கொத்து, கொத்தாக செத்து விழுந்ததால் பரபரப்பு

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.;

Update:2024-06-15 02:00 IST

திருவனந்தபுரம்,

கேரளாவில் பறவை காய்ச்சல் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் இதன் தாக்கம் அதிகம். பொதுவாக வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள், வீட்டு வளர்ப்பு பறவைகள் அழிக்கப்படும். அந்தவகையில் இதுவரை கேரளாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழை மாவட்டம் முகம்மா கிராமத்தில்தான் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கொத்து, கொத்தாக அங்கு காகங்கள் இறந்தன.

இதனால் கிராமத்தில் மக்களிடையே அச்சம் உருவானது. இதனை தொடர்ந்து அந்த காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபால் வைராலஜி மையத்திற்கு அனுப்பியதாகவும், அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் முகம்மா கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்வப்னா பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்