பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மிகவும் கவலைக்குரிய விஷயம் - பிரதமர் மோடி
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
மேற்குவங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.
இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டு சார்பில் மாவட்ட நீதித்துறையின் 2 நாட்கள் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடியும், தலைமை நீதிபதி சந்திரசூட்டும் இதை வெளியிட்டனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது,
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நாட்டில் பல்வேறு சட்டங்கள் உள்ளன. 2019ம் ஆண்டு சிறப்பு விரைவு கோர்ட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சாட்சி பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்கள் மேலும் வலிமையடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் விரைவாக தீர்ப்புகள் வழங்க முடியும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை நீக்க கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
நீதித்துறை மீது நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஜனநாயகத்தின் தாயாக செயல்பட்டு இந்தியாவை மேலும் பெருமைபடுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.