பொக்கிஷ அறை பழுதுபார்க்கும் பணி: தொல்லியல் துறைக்கு பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் வலியுறுத்தல்
பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையை பழுதுபார்க்கும் பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
பூரி:
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் (ரத்ன பந்தர்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்கள், மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த நகைகளை கணக்கெடுப்பதற்காக, 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது.
ஆனால் பொக்கிஷ அறையின் நிலை மோசமாக இருந்ததால், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்தது. சேதம் தொடர்பாக மதிப்பிடுவதற்காக ஆய்வு செய்யப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் புனரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், பொக்கிஷ அறையை பழுதுபார்க்கும் பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி கோவில் தலைமை நிர்வாகி அரபிந்த பதி கூறுகையில், "பொக்கிஷ அறை புனரமைப்பு தொடர்பாக தொல்லியல் துறையின் 45 பக்க ஆய்வறிக்கை எங்களுக்கு வந்துள்ளது. அதில் பொக்கிஷ அறையின் தரை மற்றும் சுவரில் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப அறிக்கையை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். தொல்லியல் துறை உடனடியாக பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டும். அதற்கு கோவில் நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும். கோவிலின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் கோவில் நிர்வாகம் கவனமாக இருக்கிறது" என்றார்.