ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறாரா கெலாட்? - புதிய முதல்-மந்திரி யார்?
ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஜெய்ப்பூர்,
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வரும் 30-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அதேவேளை, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டிடப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ராஜஸ்தான் முதல்-மந்திரியான அசொக் கெலாட், கேரள எம்.பி. சசீ தரூர் உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
குறிப்பாக, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி விதிகளின் படி ஒரு நபர் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும் என்பதால் தலைவர் தேர்தலில் கெலாட் வெற்றிபெறும் பட்சத்தில் அவர் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்படும்.
இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் இன்று முதல்-மந்திரி அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ள அசோக் கெலாட் ஒருவேளை வெற்றிபெறும் பட்சத்தில் ராஜஸ்தானுக்கு புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றிபெறும்பட்சத்தில் ராஜஸ்தானின் புதிய முதல்-மந்திரியாக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசோக் கெலாட் இல்லத்தில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அஜய் மாகன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.