அரியானா சட்டமன்ற தேர்தல் - வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் அறிவிப்பு
பா.ஜ.க. சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதே சமயம், அரியானாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியானா மாநில பாஜக இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், அரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.