காங்கிரசுக்கு எதிரான விளம்பரம்; கர்நாடக பா.ஜ.க. தலைவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

காங்கிரசுக்கு எதிராக குறிப்பிட்ட விளம்பரம் வெளியிட்டதற்காக கர்நாடக பா.ஜ.க. தலைவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2023-05-08 16:00 GMT

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (10-ந்தேதி) நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

தேர்தல் களத்தில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில், காங்கிரசுக்கு எதிராக குறிப்பிட்ட விளம்பரம் ஒன்றை 2023-ம் ஆண்டு மே 8-ந்தேதி அன்று பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.

இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் ஒன்றை அளித்து உள்ளது. இதனை பெற்று கொண்ட பின்னர், கர்நாடக பா.ஜ.க. தலைவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில், பொதுவாக கூறும் விசயங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியன தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், எதிர்க்கட்சியினரை பற்றிய குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் விசயங்களை கூறும்போது, அதற்கு பரிசோதிக்கப்பட்ட மற்றும் அடையாளங்காண கூடிய உண்மைகளும் தேவையாக உள்ளன.

அதுபோன்று, அடிப்படையான மற்றும் உறுதியான சான்றுகள் இல்லாமல் கூறப்படும் விசயங்கள், வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் திறன் பெற்றவை. அத்துடன் சரியான வேட்பாளரை தேர்வு செய்யும் வாக்காளர்களுடைய உரிமையை பறிக்கும் விசயமும் ஆகும் என தெரிவித்து உள்ளது.

அதனால், இந்த விளம்பரத்துடன் தொடர்புடைய ஆய்வு செய்யப்பட்ட மற்றும் உண்மைகளை அடையாளம் காண கூடிய வகையிலான விசயங்களை, விளக்கம் ஏதும் இருக்குமெனில் அதனுடன் சேர்த்து, மே 9-ந்தேதி இரவு 8 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்