கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மற்றொரு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நோய் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் முதல் பாதிப்பு குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் கூறியதாவது:-
"கன்னூரைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தற்போது பரியாரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.