ஆந்திரா: திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தல் - 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைது
பாக்கராபேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் பாக்கராபேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலில் பேரில் போலீசார் நேற்று நள்ளிரவு முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த வேன் ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வேனில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பின்னால் காரில் வந்தவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 33 உயர் ரக செம்மரக்கட்டைகள் மற்றும் 3 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 4 பேர், கேரளாவை சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேரை போலீசார் கைதுசெய்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும், வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.