ஏலியன், வேற்றுகிரக நம்பிக்கை... கேரள தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை; விலகாத மர்மம்
பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளும் கூட வருங்காலத்தில் வேறொரு கிரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என மூன்று பேரும் நம்பியுள்ளனர்.;
திருவனந்தபுரம்,
கேரளாவை சேர்ந்தவர் நவீன் தாமஸ். இவருடைய மனைவி பி. தேவி. இந்த தம்பதியின் தோழி ஆர்யா நாயர். ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் உள்ள ஜிரோ நகரில் ஓட்டல் அறை ஒன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இவர்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி ஆர்யாவின் லேப்டாப்பை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் டைனோசார்கள் இன்னும் பூமியில் வாழ்கின்றன என்ற நம்பிக்கையை கொண்டிருந்துள்ளனர். பெரிய உயிரினங்களான அவை, பின்னர் வேறு சில கிரகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்க கூடும் என்றும் நம்புகின்றனர். வருங்காலத்தில் பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளும் கூட வேறொரு கிரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என மூன்று பேரும் நம்பியுள்ளனர்.
இதுதவிர, பூமி தவிர்த்து ஆண்டிரோமிடா பால்வெளி மண்டலத்தில் உயிர்கள் வாழ்கின்றன என்றும் அவர்கள் நம்பியுள்ளனர். அந்த லேப்டாப்பில், மித்தி என்ற கற்பனையான நபருடன் உரையாடல் நடத்திய விவரங்களும் இருந்துள்ளன. ஆர்யாவுக்கு அடையாளம் தெரியாத செர்வரில் இருந்து மெயில்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றை நவீன் அனுப்பி இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அடிப்படையற்ற விசயங்களை பரப்பியதற்கு பின்னணியில் சில அமைப்புகள் இருக்க கூடிய சாத்தியம் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் தற்கொலை செய்ய ஜிரோ நகரை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது இன்னும் புரியாத ஒன்றாக உள்ளது.
அவர்கள் குறியீட்டுமொழியில் ஆன்லைன் வழியே தொடர்பு கொண்டது, இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலின் தொடர்பு இருக்க கூடும் என்ற போலீசாரின் சந்தேகம் வலுக்க அடிப்படையாக அமைந்துள்ளது. இதுபற்றி அருணாசல பிரதேசம் மற்றும் திருவனந்தபுரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் இன்று அல்லது நாளை கிடைக்கும். அதன்பின்னர் மர்ம விசயங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.