"அக்னிபத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய விமானப்படை தகவல்
“அக்னிபத்” ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.
அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.
அந்தவகையில் "அக்னிபத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது இந்த முறை 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.