ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் புகை: என்ஜின்களில் ஒரு வாரத்திற்குள் ஆய்வு நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து விமான என்ஜின்களிலும் ஒரு வாரத்திற்குள் உரிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
ஐதராபாத் விமான நிலையத்தில் கடந்த வாரம், ஸ்பைஸ்ஜெட் கியூ400 விமானம் ஒன்று கோவாவிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் விமானம் தரையிறங்க தயாராகும் போது கேபினில் புகை காணப்பட்டது. திடீரென கேபினுக்குள் புகை வருவதைக் கண்டு அதிர்ர்சியடைந்த விமானி, உடனே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதில் இருந்த 86 பேர் அவசரகால வழி மூலம் வெளியே இறங்கினர். இதனையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒன்பது விமானங்கள் வேறி இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது 'என்ஜினில் உள்ள எண்ணெய், விமானத்தின் குளிர்சாதன(ஏ.சி) அமைப்பில் நுழைந்து, கேபினில் புகையை உண்டாக்குகிறது' என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து கியூ400 விமான என்ஜின்களிலும் ஒரு வாரத்திற்குள் உரிய ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து டிஜிசிஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு முறை இந்த ஆய்வின் போதும், என்ஜின்களில் இருந்து சேகரிக்கப்படும் அனைத்து எண்ணெய் மாதிரிகளையும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் சோதனைக்காக கனடாவிற்கு அனுப்ப வேண்டும்.