புலிக்குட்டிக்கு 'ஆதித்யா' பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் மராட்டிய எதிர்க்கட்சிகள் சாடல்

புலிக்குட்டிக்கு ஆதித்யா பெயரை சூட்டாமல் தவிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறிய விமர்சனத்திற்கு ஏக்நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார்.

Update: 2023-09-17 22:15 GMT

பெயர் சூட்டும் விழா

மகா விகாஸ் அகாடி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசை முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கடுமையாக சாடி வருகிறார்.இந்த நிலையில் சந்திரபதி சம்பாஜிநகரில் 2 ஆண் மற்றும் ஒரு பெண் புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

நிகழ்ச்சியில் புலிக்குட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் சீட்டுகளில் எழுதி கண்ணாடி குடுவையில் இடப்பட்டு இருந்தது. இந்த குடுவையில் இருந்து பெயர்கள் அடங்கிய சீட்டை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், அஜித்பவாரும் எடுத்தனர்.

ஆதித்யா பெயர்

அஜித்பவார் தான் எடுத்த பெயர் அடங்கிய சீட்டை ஒரு சிறிய புன்னகையுடன் பின்னால் இருந்தவரிடம் காட்டினார். இதில் ஆதித்யா என்று எழுதப்பட்டு இருப்பதாக பின்னால் இருந்த ஒருவரின் குரல் கேட்டது. ஆனால் அஜித்பவார் மற்றொரு சீட்டை எடுக்க பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேறொரு சீட்டை எடுத்தார். அதில் விக்ரம் என்று எழுதப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மூன்று புலிக்குட்டிகளுக்கும் இறுதியாக ஷ்ரவாணி, விக்ரம் மற்றும் குன்ஹா என பெயர் சூட்டப்பட்டது.

தரம் குறைந்த அரசியல்

ஆதித்ய என்ற பெயர் தவிர்க்கப்பட்டது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அம்பதாஸ் தன்வே கூறுகையில், " இந்த உலகில் இருந்தும் (ஆதித்ய தாக்கரே) அல்லது வானத்தில் இருந்தும் (சூரியன் எனப்படும் ஆதித்யா) ஆதித்யாவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவரது பெயரை கண்டு இந்த அரசு பயப்படுகிறது.

அதேபோல எம்.ஐ.எம். தலைவர் இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், " புலிக்குட்டிகளுக்கு வேறு பெயர்களை தேர்வு செய்ய அவசியம் இல்லை. அதற்கு தேவேந்திரா, அஜித், ஏக்நாத் என்று பெயர் வைத்திருக்கலாம். இது தரம் குறைந்த அரசியல், இதுபற்றி மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.

பயம் இல்லை...

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, " பெயரிடும் விழாவின்போது ஒரே நேரத்தில் 2 சீட்டுகள் எடுக்கப்பட்டது. எனவே ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டது. இதற்கு மேல் இதில் கூற எதுவும் இல்லை. இதுபோன்ற சிறிய பிரச்சினைகளை விவாதிக்க கூடாது. காட்டில் பிறந்த ஒரு குட்டிக்கு பெயர் வைக்க முடியாது. ஆனால் மிருககாட்சி சாலையில் பிறந்த குட்டிக்கு தான் பெயர் வைக்கப்படுகிறது. எந்த ஆதித்யாவுக்கும் நாங்கள் பயப்படவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்