கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
ஆராய்ச்சிகள் ஊக்குவிப்பு
கர்நாடகத்தில் சமீபத்தில் ரூ.2.80 லட்சம் கோடிக்கான தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கினோம். அடுத்த 3 மாதங்களில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். விமானவியல், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் யூனிகார்ன்(ரூ.8 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனம்) நிறுவனங்களிலும் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகத்தில் மட்டும் 35 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தனி கொள்கைகளை உருவாக்கியுள்ளோம். சர்வதேச தரத்திலான 400 ஆராய்ச்சி மையங்கள் கர்நாடகத்தில் செயல்பட்டு வருகின்றன. இங்கு மட்டும் 10 ஆயிரம் என்ஜினீயர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆராய்ச்சி பட்டியலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.
வேலைவாய்ப்பு கொள்கை
இந்த மாநாடு மூலம் கர்நாடகத்திற்கு ரூ.7 லட்சம் கோடிக்கு முதலீடுகள் வரவுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட ரூ.13 ஆயிரம் கோடி வரி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. இது கர்நாடகத்தின் பலம். ஜி.எஸ்.டி. வரி வசூலில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது.
கர்நாடகத்தில் வேலை வாய்ப்பு கொள்கையை அமல்படுத்தியுள்ளோம். தொழில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து வகையான சலுகைகளும் வழங்கப்படும். கன்னடர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குகிறோம்.
நாடுகளின் பார்வை
எல்லா சவால்களுக்கும் தீர்வு காணப்படும். உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது. அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வருகிற 2025-ம் ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.