அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை எடுக்கப்படும் - கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்
அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்,
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் 75 பள்ளிகளுக்கு சென்று பள்ளிகளின் தரம், மாணவர்கள் வளர்ச்சி மற்றும் சிறப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், காரைக்காலில் உள்ள அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி, தலத்தெரு என்.எஸ்.சி.போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி, வரிச்சக்குடி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் பூவம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது,
அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து அவர்களை உற்சாகப் படுத்துவது தான் இந்த ஆய்வின் நோக்கம் ஆகும். ஏற்கனவே புதுச்சேரியில் பல்வேறு பள்ளிகளை ஆய்வு செய்த நிலையில், காரைக்காலில் இன்று சில பள்ளிகளை ஆய்வு செய்துள்ளேன்.
மேலும் அன்னை தெரசா பள்ளியில் மாணவிகளின் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அரசு பள்ளியில் இது போன்ற சிறப்பான நிகழ்வுகள் மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
மேலும் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான் அரசின் நோக்கம் ஆகும். இது குறித்து, புதுச்சேரி முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்து உள்ளேன்
மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூரிடம் பேசும் பொழுது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். என கேட்டுக் கொண்டார். அதற்குண்டான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.