வலிமையான நீரோட்டம்; ஒரு சில நொடியில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்: வைரலான வீடியோ
உத்தரகாண்டில் வலிமையான நீரோட்டத்தின் நடுவே சென்ற இளைஞர் மற்றவர்கள் பார்த்து கொண்டிருக்கும்போதே நீரில் அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலானது.
டேராடூன்,
உத்தரகாண்டில் கனமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பதேபூர் பகுதியில் கனமழையால் வெள்ளம் ஓடி கொண்டிருக்கும் பகுதியை கடந்து செல்ல இளைஞர் ஒருவர் முயற்சித்து உள்ளார். கரை பகுதியில் வாகனத்தில் வந்தவர்கள் இருபுறமும் நின்றிருந்தபோது, அந்த நபர் அதன்வழியே நடந்து சென்றுள்ளார்.
இதில் வலிமையான நீரோட்டத்தின் நடுவே இளைஞர் சென்றபோது, நீரின் வேகத்தில் தவறி கீழே விழுகிறார். அந்த வேகத்திலேயே அவர் நீருடன் அடித்து செல்லப்படுகிறார். ஒரு சில வினாடிகளிலேயே அவர் நீருக்குள் மறைந்து விட்டார்.
இந்த சம்பவத்தில் அந்த இளைஞரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. எனினும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என மாஜிஸ்திரேட் ஹல்டுவானி மணீஷ் குமார் சிங் தெரிவித்து உள்ளார்.