மெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
மெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூரு பென்னிகானஹள்ளி பகுதியில் மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகே பயணிகள் வசதிக்காக நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாலத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதைக்கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக அங்கிருந்து அந்த இளம்பெண் ஓடினார். பின்னர் அங்கிருந்த மெட்ரோ நிலைய ஊழியரிடம் இதுகுறித்து கூறினார்.
உடனே மெட்ரோ நிலைய ஊழியர் அந்த மர்மநபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்ததும், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.