தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சம் கையாடல்; மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.29½ லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவமொக்கா:
தனியார் நிதி நிறுவனம்
சிவமொக்கா நகர் என்.டி. சாலையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் மேலாளராக தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஆஷிக், உதவி மேலாளராக தாவணகெரேயை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். மேலும் வீட்டு வசதி கடன் பிரிவில் ஒசநகரை சேர்ந்த மோகன் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் மேலாளர் ஆஷிக், உதவி மேலாளர் ராஜேஷ், ஊழியர் மோகன் குமார் ஆகியோர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் நிதி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அதிகாரிகள் சிவமொக்கா நிதி நிறுவனத்தில் கணக்கு தணிக்கையில் ஈடுபட்டனர்.
ரூ.29.47 லட்சம் மோசடி
அப்போது கடந்த 15-ந்தேதியில் இருந்து கணக்கை சரி பார்த்தபோது, ரூ.29.47 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது. அதாவது, வாடிக்கையாளர்ள் அடகு வைத்த தங்க நகைக்கும், நிதி நிறுவனத்தில் இருந்த தங்க நகைக்கும் வித்தியாசம் இருந்தது. மேலும் கையிருப்பு பணத்திலும் வித்தியாசம் இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது, நிதி நிறுவனத்தின் மேலாளர் ஆஷிக், உதவி மேலாளர் ராஜேஷ், ஊழியர் மோகன் குமார் ஆகியோர் ரூ.29.47 லட்சம் அளவுக்கு பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து நிதி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திர பிரசாத், தொட்டபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மேலாளர் ஆஷிக், உதவி மேலாளர் ராஜேஷ், ஊழியர் மோகன் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.