மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2022-09-04 14:43 GMT

சிவமொக்கா;

குழந்தை இல்லாமல்...

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிளகி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 31). இவருக்கும் மங்களா (28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்காமல் இருந்துள்ளது.

இதன்காரணமாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந்தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தொிகிறது. இந்த நிலையில் அன்றைய தினம் மங்களா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது குழந்தை பெற்று கொடுக்காததால் ஆத்திரமடைந்த மகேஷ், மங்களாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.


ஆயுள் தண்டனை

இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் மகேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது.

கோர்ட்டில், சிகாரிப்புரா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மானு தீர்ப்பு வழங்கினார்.

அதில் மகேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்