வங்கியில் ரூ.2¼ லட்சம் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்
உப்பள்ளியில் தனியார் வங்கியில் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
உப்பள்ளி-
உப்பள்ளியில் தனியார் வங்கியில் ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
தனியார் வங்கியில் கொள்ளை
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் குயின்ஸ் ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ந்தேதி வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடி கொண்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர் ஒருவர் தனியார் வங்கியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் வங்கியின் லாக்கரில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு, ரூ.2.31 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு சென்றார். மேலும் அவர் கொள்ளையடித்து விட்டு செல்லும்போது வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும், டி.வி.ஆரையும் எடுத்து சென்றனர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் உப்பள்ளி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை
செய்தனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வாலிபர் சிக்கினார்
இதையடுத்து இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த, உப்பள்ளி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் சவுகளே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் உப்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் உத்தர கன்னடா மாவட்டம் தாண்டோலி பகுதியை சேர்ந்த முஜிபுர் (வயது28) என்பதும், உப்பள்ளி தனியார் வங்கியில் ரூ.2.31 லட்சத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.2.31 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் முஜிபுரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.