அரக்கல்கோடு தொகுதியில் ஏ.மஞ்சு போட்டி

ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் அரக்கல்கோடு தொகுதியில் ஏ.மஞ்சு போட்டியிடுவார் என்று எச்.டி.ரேவண்ணா அறிவித்துள்ளார்.

Update: 2023-03-12 20:49 GMT

ஹாசன்:-

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆளும் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் யாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்கள். மாநில கட்சியான ஜனதாதளம்(எஸ்) மட்டும் முதல்கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவேகவுடா, குமாரசாமி, ரேவண்ணா முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். மேலும் அரக்கல்கோடு தொகுதியில் அவர் வாய்ப்பு கேட்டும் வந்தார்.

ஏ.மஞ்சு போட்டி

இந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா நேற்று ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் அரக்கல்கோடு தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஏ.மஞ்சு போட்டியிடுவார். இதுகுறித்து நான் குமாரசாமியிடம் பேசுவேன். காங்கிரசில் சேர சிலர் (அரக்கல்கோடு தற்போதைய எம்.எல்.ஏ. ஏ.டி.ராமசாமி) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அரக்கல்கோடு தொகுதியில் ஏ.மஞ்சுவுக்கு நல்ல பெயர் உள்ளது. அவர் வேட்பாளராக வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

சுமலதா பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் பெரியவர்கள். அவர்களை பற்றி பேச எனக்கு அதிகாரம் இல்லை. பிரதமர் மோடி இன்று (நேற்று) பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை திறந்து வைத்துள்ளார். அந்த திட்டத்தை தொடங்கியது நாங்கள் தான். நாங்கள் விரைவுச்சாலை திட்டத்தை தொடங்கவில்லை என்றால், இன்று மோடியால் அந்த சாலையை திறந்து வைக்க முடியாமல் பொயிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்