சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கொலையை விட மிகப்பெரிய குற்றமாகும்; கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கொலையை விட மிகப்பெரிய குற்றமாகும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-15 22:03 GMT

பெங்களூரு:

ஜாமீன் மனுக்கள் விசாரணை

கா்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பால் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோல், இந்த வழக்கில் கைதாகி உள்ள போலீஸ்காரர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சந்தேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு சம்பந்தப்பட்ட வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபபட்டுள்ளதால், தங்களது மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கும்படி வாதிட்டனர். இதற்கு சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கொலையை விட மிகப்பெரிய...

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தேஷ் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது ஒரு கொலையை விட மிகப்பெரிய குற்றமாகும். ஒருவர் கொலை செய்யப்பட்டால், அவரும், அவருடைய குடும்பத்தினரும் தான் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறைகேடு காரணமாக 50 ஆயிரம் பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சமுதாயத்திற்கு பெரும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சமுதாயத்தில் நடந்திருக்கும் ஒரு கீழ்தரமான செயலாகும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்திருக்கும் முறைகேட்டை கர்நாடக ஐகோர்ட்டு கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு சாதாரண வழக்காக எடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கூடாது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி சந்தேஷ் கூறினார். பின்னர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்