மூடிகெரே அருகே காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

மூடிகெரே அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் வனத்துறையினரை சுற்றி வளைத்து இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

சிக்கமகளூரு:-

காட்டுயானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் ஆல்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. விளைபயிர்களை மிதித்து நாசப்படுத்துவதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்த காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காட்டுயானையின் அட்டகாசத்தை மட்டும் தடுக்க முடியாமல் போய்விடுகிறது.

விவசாயி சாவு

இந்தநிலையில் மூடிகெரே தாலுகா ஆல்தூரில் காட்டுயானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். ஆல்தூர் அடுத்த அரேனூர் கிராமத்தை சேர்ந்தவர் துர்கா கின்னி(வயது 51).விவசாயி. அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்்தநிலையில் நேற்று முன்தினம் துர்காகின்னி தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று இவரது தோட்டத்திற்குள் புகுந்தது. இதை துர்காகின்னி கவனிக்கவில்லை. திடீரென்று காட்டுயானை அவரை தும்பிக்கையால் மடக்கி பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் துர்காகின்னியை மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த துர்கா கின்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்ற வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து துரத்தினர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் துர்காகின்னியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும். உயிரிழந்த துர்கா கின்னியின் குடும்பத்திற்கு சரியான இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்