குழந்தை கடத்தல் கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ்-அப்பில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் வேண்டுகோள்

குழந்தை கடத்தல் கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ்-அப்பில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-10-03 19:00 GMT

சிக்கமகளூரு;

குழந்தை கடத்தல் கும்பல்

சிக்கமகளூரு மாவட்டத்தில் சில பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் வந்துள்ளதாக கடந்த சில தினங்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் ஒருவரின் படத்தை பதிவிட்டு குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்து ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், குழந்தை கடத்தல் கும்பலை பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

வதந்தியை பரப்ப வேண்டாம்

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் வரவில்லை. இதுவரை எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் குழந்தையை காணவில்லை என புகார் பதிவாகவில்லை. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற வதந்திகளை நம்பி யாரும் பயப்பட வேண்டாம். இந்த தகவலை யாருக்கும் பகிர வேண்டாம். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்