மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் சாவு
மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீ விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.;
உப்பள்ளி;
உப்பள்ளி புறநகர் பகுதி தரியாலாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை உள்ளது. கடந்த மாதம்(ஜூலை) 23-ந்தேதி எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 8 பேர், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானார்கள். மேலும் அடுத்தடுத்த நாட்களில் 2 பேர் இறந்து போனார்கள்.
இதையடுத்து தொடர்ந்து 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தரியாலா கிராமத்தை சேர்ந்த சன்னவ்வா (42) என்பவர் உயிரிழந்தார்.
இதனால் மெழுகுவர்த்தி தொழிற்சாலை தீவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தொடர்ந்து 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.