பூரி ஜெகநாதர் கோவிலில் அத்துமீறி நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேர் கைது

பூரி ஜெகநாதர் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் செல்ல அனுமதி இல்லை.;

Update:2024-03-04 13:22 IST

பூரி,

ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம் பூரி. இங்குள்ள ஜெகநாதர் கோவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும்.

இந்தநிலையில் பூரி ஜெகநாதர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேரை ஒடிசா போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகநாதர் கோவிலுக்குள் வங்காளதேசத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் கோவில் விதிமுறைகளை மீறி நுழைந்ததாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சிங்கத்வார் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து சுற்றுலாப் பயணிகளை விசாரணைக்காக அழைத்து சென்றதாக பூரி கூடுதல் எஸ்.பி. சுஷில் மிஸ்ரா கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

வங்காளதேசத்தை சேர்ந்த இந்துக்கள் அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைந்ததாக எங்களுக்கு புகார் வந்தது. நாங்கள் வங்காளதேசத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கோவில் விதிமுறைகளின்படி, இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களின் பாஸ்போர்ட்டை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். அவர்களில் ஒருவர் இந்து என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து வருகிறோம். கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 4 பேர் கோவிலுக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எஸ்.பி. கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்