கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது

Update: 2022-05-20 22:28 GMT

மைசூரு: தொடர் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணை

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட ஏராளமான மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணை

124.80 அடி நீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரத்து 814 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,192 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்து 102.80 அடியாக இருந்தது. இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 481 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,261.64 அடியாக இருந்தது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு

மேற்கண்ட கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமகூடலு திருவேணி சங்கமத்தில் காவிரி ஆற்றில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழ்நாட்டுக்கு செல்கிறது. அதன்படி இவ்விரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 7,192 கன அடி நீர் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி நீர்ப்பாசன துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கர்நாடகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் காவிரி, கபிலா உள்பட ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்பட ஏராளமான அணைகள் நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை மட்டும் நேற்று ஒரேநாளில்(நேற்று முன்தினம்) 8 அடி உயர்ந்திருக்கிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழ்நாட்டுக்கும் காவிரியில் கணிசமான அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்கிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்