வங்கிக்கு போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று மோசடி தனியார் நிறுவன உரிமையாளரின் ரூ.7½ கோடி சொத்துக்கள் ஜப்தி
வங்கிக்கு போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று மோசடி தனியார் நிறுவன உரிமையாளரின் ரூ.7½ கோடி சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டது.
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவரும், அதன் இயக்குனராகவும் இருந்து வருபவர் தனஞ்செய ரெட்டி. இவர், வங்கி ஒன்றில் ரூ.23.73 கோடி கடன் பெற்றிருந்தார். இவ்வாறு வாங்கிய கடனுக்காக தனஞ்செய ரெட்டி வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் வங்கியில் பெற்ற கடனை தனது நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தாமல், வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனஞ்செய ரெட்டி மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த விசாரணையில் தனஞ்செய ரெட்டி, வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்திருந்ததும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கணடுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தனஞ்செய ரெட்டி மீதும், அவரது நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தனஞ்செய ரெட்டிக்கு சொந்தமான ரூ.7.58 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.